தருமபுரி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி பேசுகையில், "ஒரு ரூபாய் நாம் வரி செலுத்தினால் தமிழகத்துக்கு 29 பைசா வருகிறது. பீகார் மாநிலத்திற்கு ஏழு ரூபாயும், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மூன்று ரூபாயும், தமிழ்நாட்டுக்கு வெறும் 29 பைசாவும் வழங்குகிறார்கள்.
நிதி உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிதி உரிமை அனைத்தையும் அதிமுக அடிமைகள் பாஜகவுடன் சேர்ந்து அடகு வைத்து விட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி மாநில உரிமையை மீட்பதாக கிளம்பி இருக்கிறார். யாரிடமிருந்து மீட்க போகிறீர்கள் அடகு வைத்தது நீங்கள் தானே?" என்றார்.
பின்னர், எங்களைப் பார்த்து இந்தியா கூட்டணி தனி அணி தானே உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார். நான் எடப்பாடி பழனிசாமியை கேட்கிறேன், “பாஜக கூட்டணியில் இல்லை என்று சொல்கிறீர்களே உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் திரு எடப்பாடி பழனிசாமியா” என கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து, முதலமைச்சர் ஆவதற்கு என்னவெல்லாம் செய்தார் என்று உங்களுக்கே தெரியும் தவழ்ந்து தவழ்ந்து சென்று சசிகலா அம்மையார் காலில் விழுந்து கடைசியில் அந்த அம்மையாரின் காலையே வாரி விட்டவர் என விமர்சித்தார்.
மேலும், அவர் பேசுகையில், "அவர்களுக்கு மட்டும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யவில்லை, ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் வாழும் மக்களையும், மாநில உரிமை அத்தனையும் அடகு வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு கூட்டணியும் விரட்டியடிக்க வேண்டும். சிஏஜி அறிக்கையில், கடந்த 9 ஆண்டு கால மத்திய பாஜக அரசில், ஏழரை லட்சம் கோடி பணம் காணவில்லை என தெரிவித்துள்ளது.
அந்த நிதி எங்கே சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் செலவு செய்ததாக தெரிவிக்கிறார்கள். இறந்து போன 88 ஆயிரம் நபர்களுக்கு ஆஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரே செல்லிடப்பேசி எண்ணில் மருத்துவ காப்பிடு திட்டம் செய்திருக்கிறார்கள். பி.எம்.கேர்ஸ் திட்டத்திலும் பல கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது.
34 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தார்கள், அதை கணக்கு கேட்டால் தகவல் உரிமை சட்டத்தில் தர முடியாது என்று தைரியமாக சொல்கிறார். திரு.29 பைசா அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு.. வடலூரில் போராட்டம் - 200க்கும் மேற்பட்டோர் கைது! - Vallalar Temple Vadalur