சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக பதவி வழங்க வேண்டுமென திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது தமிழக அரசியலில் சமீபகாலமாக பெரும் பேசுபொருளாக இருந்த சூழலில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, தமிழக ஆளுநர் முன்னிலையில் நேற்று (செப்.29) புதிய அமைச்சர்கள் பதவியேற்றதோடு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தற்போது 35 அமைச்சர்கள் உள்ளனர். முன்னதாக, 33 அமைச்சர்கள் இருந்து வந்த சூழலில், அதில் 3 பேர் நீக்கப்பட்டதோடு, இரண்டு முன்னாள் அமைச்சர்களும், புதிதாக இரண்டு பேரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், எஸ்.எம்.நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியனுக்கு முக்கிய துறையான உயர்கல்வித் துறையும், சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான அந்த புதிய பட்டியலின் அடிப்படையில், முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இடம்பெற்றுள்ளனர்.