தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போட்றா வெடிய.. துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்! - udhayanidhi stalin political career - UDHAYANIDHI STALIN POLITICAL CAREER

திமுகவின் இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அமைச்சர் உதயநிதி (கோப்புப்படம்)
அமைச்சர் உதயநிதி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 4:12 PM IST

திமுகவில் முக்கிய பொறுப்பான இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் நேரம் நெருங்கியுள்ளது. திமுகவில் கட்சி பொறுப்பேற்ற ஒருவர் விரைவிலேயே எம்எல்ஏ-ஆகி, இரண்டே வருடத்தில் அமைச்சர் பதவியும் பெற்று, துணை முதல்வர் அந்தஸ்தை பெறுவது மிகவும் கவனம் பெற்றுள்ளது.

உதயநிதி அரசியல் என்ட்ரி:

சினிமாவில் 2008 ஆம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், 2012 இல் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வெளியுலகில் பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் வந்த உதயநிதி ஸ்டாலின், 2019 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாம் மேற்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தார். அதிமுகவையும், மத்தியில் உள்ள பாஜகவையும் கடுமையாக சாடி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழ தொடங்கின.

கட்சியில் பொறுப்பு:

இதனை அடுத்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்த உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியறுத்தினர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த இளைஞரணி பொறுப்பு 2019 ஜூலையில் உதயநிதிக்கு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுகவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது இளைஞரணி மாநாடானது உதயநிதி தலைமையிலேயே சேலத்தில் பிரமாண்டமாக நடந்தது. அப்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகமாக இருந்ததால், திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை வலுப்படுத்த மாநாடு நடத்தப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சட்டசபை தேர்தலில் போட்டி:

இப்படியான சூழலில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உதயநிதி போட்டியிட விரும்புவதாகவும், தேர்தல் அரசியலில் அவர் களமிறங்க இதுவே சரியான நேரம் எனவும், திமுக நிர்வாகிகள் பலர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் பரவின. ஒரு கட்டத்தில், சட்டசபை தேர்தலில் உதயநிதி போட்டியிடுவது உறுதியானது. தொடர்ந்து அவருக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஒற்றை செங்கலில் 'எய்ம்ஸ்' என எழுதி வேடிக்கையாக பிரச்சாரம் செய்தது பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், தமிழகத்தில் ஆட்சியையும் பிடித்தது திமுக. இந்த வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்ததாக கட்சி நிர்வாகிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும், கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தபடி அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறவில்லை.

அமைச்சர் பதவி:

சந்தித்த முதல் தேர்தலிலேயே அமைச்சர் பதவி கொடுத்தால் தேவையில்லாத விமர்சனங்களுக்கு வழி வகுக்கும் எனவும் ஒரு எம்எல்ஏ-வாக அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு அமைச்சர் பதவி தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து அரசு பணியையும், கட்சி பணியையும் பார்த்து வந்த உதயநிதி 2022 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்முதலே, தமிழகத்தில் விளையாட்டுத்துறையில் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட உதயநிதி பல்வேறு போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும், முக்கிய துறைகளின் திட்டங்களையும் கவனித்து வருகிறார்.

துணை முதல்வர்:

எம்எல்ஏ ஆன இரண்டே ஆண்டுகளில் அமைச்சராகியுள்ள உதயநிதி நான்கு ஆண்டுகளில் துணை முதல்வர் பொறுப்பும் தற்போது காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும்கூட திமுக மாவட்ட நிர்வாகிகள் முதல் முதல்வர் வரைக்கும் இந்த சிந்தனை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் அமெரிக்க பயணம் செல்வதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளதே என்ற கேள்விக்கு "வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை" என பதில் அளித்தார். இதனால், இதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக பார்க்கப்பட்டது. அதே சமயம், அதனை மறுக்கும்படியும் முதல்வரின் பதில் அமையவில்லை.

இதற்கிடையே, இதே கேள்வியை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, ''அது தொண்டர்கள் விருப்பம். அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருந்து வருகிறோம்'' என்றார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலிடம் மீண்டும் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர், ''அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி விவகாரத்திற்கு ‘ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்’ என்று தெரிவித்தார். இதனால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டால், சீனியர் அமைச்சர்களுக்கு மனகசப்பு ஏற்படாத வகையில் அமைச்சரவையில் சில மாற்றங்களோடு அவர்களுக்கு வலுவான மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details