சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார்.
அப்போது, '' வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும், சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.
தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் உடலால் மறைந்தாலும், அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் செயல் வடிவம் கொடுத்தனர்.
சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல் துறை, ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.
இதையும் படிங்க:சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டர்.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.
பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும், சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப் போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும். ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்" என இவ்வாறு உதயநிதி பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; "துணை முதலமைச்சர் நியமனம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். நான் துணை முதல்வராக வேண்டும் என்று தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது நல்ல விஷயம். யாராக இருந்தாலும், பெரியாரை தொடாமலும், அவரை மீறியும் இங்கு அரசியல் செய்ய முடியாது. பெரியாருக்கு மரியாதை செலுத்திய நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.