ஈரோடு: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு, மின் வாகனங்கள், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.08) ஈரோட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முன்னால் முதல்வர் கருணாநிதி, பெண்கள் சுய உதவிக் குழு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 30,000 கோடி ரூபாய் கடன் இலக்கில், இதுவரை 25,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் வரியாக 6 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு மாநில அரசு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்திடம் இருந்து வசூலிக்கப்பட்டதில் 1 ரூபாய்க்கு 29 பைசா திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பெண்களின் வளர்ச்சிக்காகவும் மாநில அரசு நிறைய செய்துள்ளது.
தற்போது, 17 லட்சம் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் காலை உணவும், 1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையும், லட்சக்கணக்கான பெண்கள் உயர்கல்விக்காக மாதந்தோறும் புதுமை பேனா திட்டத்தின் கீழ் 1000 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
இப்படியாக, தமிழக அரசு செயல்படுத்தும் திடங்கள் வெற்றியடைய, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக, இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சுய உதவிக் குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வளாகம் கட்டப்பட்டுள்ளது. அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய விழாவில், 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான 100 பேட்டரி வாகனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 6 சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்த ரூ.19.20 லட்சம் வங்கிக் கடனும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, சுய உதவிக் குழுக்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சூமோட்டோ வழக்குகள்: ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி!