சென்னை:சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்தியாவின் சூப்பர் கிளாசிக்கல் செஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024"-ன் நிறைவு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அதாவது, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024 மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மேலும் முதல்முறையாக நடத்தப்பட்ட சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரணவ்விற்கு ரூ.6 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பிரணவ் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரிவில் நடைபெறும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: "வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை".. சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் உருக்கம்!
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரத்திற்கும், சாலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ்வுக்கு பாராட்டுக்கள். விளையாட்டுத் துறையில் முதலமைச்சர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து, விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான உதவிகளை மேம்படுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, விளையாட்டுத்துறை தமிழகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. தேசிய அளவைக் கடந்து சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிராண்ட் மாஸ்டர் குகேஷ் எலைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 2,780 புள்ளிகளைப் பெற்று அரவிந்த் சிதம்பரம் தனது கெரியரின் உச்சத்தை அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும் 30 கிராண்ட் மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர். செஸ் போட்டியின் மீது ஆர்வம் கொண்டு இந்த போட்டிகளை நேரில் பார்க்க வந்த, 3500 பார்வையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். அதனைத் தொடந்து, உலக செஸ் சாம்பியன் தொடரில் பங்கேற்க உள்ள குகேஷிற்கு பயிற்சிக்காகவும், போட்டியில் பங்கேற்கச் செலவின தொகைக்காகவும் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், இந்திய அணி பயிற்சியாளர் (ஒலிம்பியாட்) ஸ்ரீநாத் நாராயணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்