தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலியை ஆதரித்து மன்னார் குடி பெரியார் சிலை அருகில் விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நானும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்குச் சுற்றினாலும் கடைசியில் இந்த மண்ணிற்கு தான் வந்து தான் சேர வேண்டும். தாய்மார்கள் முடிவெடுத்து விட்டால் யாராலும் ஒன்றும் பண்ண முடியாது. உதய சூரியனையும், முரசொலியையும் யாராலும் பிரிக்க முடியாது.
ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முரசொலியை வெற்றி பெறச் செய்தால் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாதத்திற்கு இரண்டு முறை வந்து உங்களின் குறைகளைத் தீர்ப்பேன்.
கடந்த 10 வருடத்திற்கு முன்பு சிலிண்டரின் விலை 450 ரூபாய் இருந்தது. தற்போது 1200 ரூபாய் உயர்ந்துள்ளது. உயர்த்தியது மோடியின் அரசு. தற்பொழுது தேர்தல் வருவதால் உங்களை ஏமாற்றுகிறார் மோடி. தற்பொழுது மகளிர்க்குப் பரிசுத்தொகை என அறிவித்துவிட்டு 100 ரூபாய் குறைத்து மகளிரை ஏமாற்றுகிறார் பிரதமர் மோடி.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் புதுமைப் பெண்கள் திட்டத்தின் கீழ் 4250 மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு. உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய முதலமைச்சர் தான் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 60 லட்சம் மகளிர் மாதம் ரூ.1000 திட்டத்திற்கு விண்ணப்பித்தார்கள்.
தற்போது ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிறு, சிறு குறைகள் உள்ளது. அதுவும் விரைவில் தீர்க்கப்படும். பிரதமர் தமிழ்நாட்டிலேயே வந்து தங்கினாலும் தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற முடியாது.
மோடிக்கு வைத்திருக்கக்கூடிய செல்லப் பெயர் மிஸ்டர் 29 பைசா என்று தான் கூப்பிட வேண்டும்.
மொழியுரிமை, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்து விட்டது. 40க்கு 40 தொகுதிகளை வெற்றி பரிசாகத் தந்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் சிறுத்தையைப் பிடிக்க தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைப்பு.. தீவிர வேட்டையில் வனத்துறை! - Leopard Issue In Mayiladuthurai