சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி நிர்வாகிகளோடு அவ்வப்போது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டல நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும், இளைஞரணி நிர்வாகிகளின் செயல்களை உற்று கவனித்து வரும் உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தலுக்குள் அணியின் குறைபாடுகளை சீர் செய்து துடிப்பான நிர்வாகிகளை அமைத்து வலுவான அணியை கட்டமைக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2-வது மண்டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனையை இன்றும், நாளையும் நடத்துகிறார்.