சென்னை: திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம் அந்தக் காலத்தில், பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்” என்று நம்முடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்தது, இல்லை - சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால், நாம் பேசிய பேச்செல்லாம் வெறும் அலங்கார அடுக்குமொழி அல்ல, உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளைப் பேசினோம்; உலக அறிஞர்களின் வரலாற்றைப் பேசினோம்; நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளைப் பேசினோம்; மூடநம்பிக்கை – பிற்போக்குத்தனம் - பெண்ணடிமைத்தனம் - இவைகளுக்கு எதிராகப் பேசினோம்.
இதையும் படிங்க:உலக புகழ் பெற்ற பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது! சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது! “சொல்வன்மை மிக்கவனை வெல்வது அரிது” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சொல்வன்மைமிக்க படைக்கலன்களை உருவாக்க வேண்டும் என்றுதான், இந்த ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தும் பொறுப்பை - இளைஞர் அணியிடம் நான் ஒப்படைத்தேன்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” – என்கிறார் வள்ளுவர்.
அப்படித்தான், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை தம்பி உதயநிதி-யிடம் நான் ஒப்படைத்தேன். இளைஞரணிச் செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து, அவர் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்தவரையில், அந்த பொறுப்பு நான் அவருக்கு கொடுத்த பயிற்சி! அப்படி பார்க்கும்போது, நான் வைக்கும் ஒவ்வொரு ‘டெஸ்ட்’-லயும் அவர் ‘செண்ட்டம் ஸ்கோர்’ எடுக்கிறார்'' என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், '' 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என முதல்வர் கோரியிருந்தார். ஏற்கனவே 75 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னும் மூன்று மாதங்களில் 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகங்கள் திறக்கப்படும் என்று தலைவரிடம் வாக்களித்துள்ளேன்.
விஜய்க்கு வாழ்த்து:பேச்சு போட்டியில் 17 ஆயிரம் மாணவர், மாணவியர் கலந்து கொண்டதில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார். அடுத்த வருடம் இந்த பேச்சு போட்டி நடத்த வேண்டும் என்று தலைவர் தெரிவித்துள்ளார் என்றார்.
தொடர்ந்து, தவெக மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் நீண்ட கால நண்பர்.. அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள். நான் தயாரித்த முதல் படம் அவருடையது தான். எந்த கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. 75 ஆண்டுகாலமாக எந்த கட்சியும் துவங்க வில்லை என கூற முடியாது. இதற்கு முன் பல கட்சிகள் வந்திருக்கிறது, பல காணாமல் போயிருக்கிறது. மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். கொள்கைகள் முக்கியம். மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்