ஈரோடு:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்:அப்போது அவர் பேசியதாவது, “நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தேன். உங்களை பார்த்தபோது இந்த முறை குறைந்தது 3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி. எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். கழகத்தில் பல அணிகள் உள்ள நிலையில் ஆ ராசாவை இளைஞரணிக்கு பொறுப்பாளராக போடவேண்டும் என திமுக தலைவரிடம் நான் சொன்னேன்.
வடை சுட்டுள்ளார்கள்: 2 ஜி பொய் வழக்கில் நீதிமன்றத்தில் தனிமனிதனாக நின்று வாதாடி வெற்றி பெற்றவர் ஆ.ராசா. தாளவாடி மலைப்பகுதியில் 13 கோடி ரூபாய் செலவில் அரசு கலைக்கல்லூரி, ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு மணி மண்டபம் வர காரணமாக இருந்தவர் ஆ.ராசா. சமையல் கேஸ் விலையை ஏற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் 100 ரூபாய் குறைத்து வடை சுட்டுள்ளார்கள்.
வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் விலை 65 ரூபாய்க்கும், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் விற்கப்படும் என தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஏனென்றால் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் பவானிசாகர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மோடிக்கு வைங்க வேட்டு: மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய நகரங்களுக்கு அகல ரயில்பாதை வழித்தடம் அமைக்கப்படும். தாளவாடி மலைப்பகுதிக்கு வனப்பகுதி வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் தமிழகம் வழியாக செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொன்னதைச் செய்வார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதனால போடுங்க பட்டனை அழுத்தி ஓட்டு. மோடிக்கு வைங்க வேட்டு. மிக்ஜாம் புயலில் அனைத்து அமைச்சர்களும் களத்தில் நின்றனர்.
11,000 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை:பிரதமர் வந்து பார்த்தாரா?. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக அரசு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. பெண்கள் கல்லூரியில் படிக்க கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாதாமாதம் 11 ஆயிரம் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம் இந்தியாவில் முதன்முறையாக கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.