தூத்துக்குடி: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ் நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து திட்டம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளேன். அரசு திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.