தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள குளத்தில் பெட்ரோல் ஊற்றி, அதில் தீயிட்டு அதன்மீது குதித்தும், மணலில் குழி தோண்டி அதில் தலைகீழாக புதைத்தும் சாகசம் செய்வதாகக் கூறி, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களைச் செய்தும், அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி உரிய விசாரணை மேற்கொண்டு, தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஏசுராஜசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தட்டார்மடம் வாழத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களான பாஸ்கர் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23), முருகன் என்பவரது மகன் சிவக்குமார் (19) மற்றும் வீரபத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகியோர் சேர்ந்து, இந்த ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களைச் செய்து வீடியோ எடுத்து, அதை தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 277 (தண்ணீரை மாசுபடுத்துதல்), 278 (சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல்), 430 (நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல்), 285 (பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 308 (மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல்) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.