சேலம்:சேலத்தில் அக்கா, தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பனைமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நவீனா என்ற மகளும், சுகன் என்கிற மகனும் உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீனா 12ஆம் வகுப்பும், சுகன் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது சித்தப்பா தனசேகர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு தந்தை ராஜா ஓடிவந்து பார்த்த போது மகனும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு வந்த ராஜாவையும், தனசேகரன் வெட்டியுள்ளார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.