சென்னை:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், சில நபர்களைத் தேடும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், பெங்களூரு காவல்துறையினரும் தீவரம் காட்டி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பல்வேறு புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாது, கடந்த மார்ச் 11ஆம் தேதி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வெளியிட்டது. இதற்கு முன்னதாக ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு தொப்பி அணிந்தவாறு தப்பி ஓடி வந்த மர்ம நபர் ஒருவர், சில தூரம் சென்ற பிறகு தொப்பியை அகற்றிவிட்டுச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து, அந்த பகுதியில் இருந்த ஒரு கழிவறையில் இருந்து அந்த தொப்பியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றி, அந்த தொப்பியில் இருந்த தலை முடியை எடுத்து டிஎன்ஏ சோதனைக்கும் அனுப்பப்பட்டு, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நபர்களின் குடும்பத்துடன், இந்த டிஎன்ஏ சோதனை ஒத்துப் போகிறதா என்ற கோணத்தில் சோதனைகள் நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது.
இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றம் சாட்டப்படும் நபரான ஷாகிப் என்பவரது முடிதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.