சென்னை:சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார்(32). இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள கிடங்கில் உதிரி பாகங்களை கணக்கிட்டுப் பார்த்தபோது, சுமார் 30 டன் உதிரி பாகங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அதே நிறுவனத்தில் கிடங்கு பொறுப்பாளராக இருந்த விமல் குமார் மற்றும் ஓட்டுநர் சதீஷ் குமார் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதாவது, கிடங்கு மேற்பார்வையாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து பொறுப்பாளர் விமல் குமார் மற்றும் ஓட்டுநர் சதீஷ் குமார் இருவரும், சிறுக சிறுக லாரி மூலம் உதிரி பாகங்களை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், லாரி மூலம் மொத்தம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 29.7 டன் உதிரி பாகங்களை திருடியுள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.