சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் முத்துவேளாளர் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (22). புத்தர் நகரை சேர்ந்தவர் ஜில்லா என்கிற தமிழரசன் (22). இவர்கள் இருவரும் பெருங்களத்தூர், குண்டு மேடு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல, பெருங்களத்தூர் பீர்க்கன்காரனை பகுதியில் சோனு என்கிற கோபாலகிருஷ்ணன் என்பவரும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த இரு கும்பலுக்கும் போதை பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை கோபாலகிருஷ்ணனின் மனைவியிடம் ''உன் கணவனை கொன்று விடுவேன்'' என மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு 7 மணி அளவில் அண்ணாமலை மற்றும் ஜில்லா தமிழரசனிடம் பேச வேண்டும் என கூறி விவேக் நகர் பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி, அங்கு வந்த அண்ணாமலை, ஜில்லா தமிழரசனிடம் கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார்.
கழுத்தறுத்துக் கொலை: அந்த சமயத்தில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். பின்னர் அரிகிருஷ்ணன் என்பவரின் ஆட்டோவில் இருவரையும் ஏற்றி, அதில் வைத்து அடித்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணன் ஆட்டோவை செய்யாறுக்கு செல்லும்படி ஓட்டுனர் அரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அரிகிருஷ்ணன் ஆட்டோவில் கேஸ் நிரப்ப வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து பீர்க்கன்காரனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொலை பின்னணி: தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுடுகாட்டில் கொலை செய்து வீசப்பட்டிருந்த அண்ணாமலை மற்றும் தமிழரசனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோருக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பெருங்களத்தூர் மற்றும் குண்டு மேடு உள்ளிட்ட பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனு என்கிற கோபாலகிருஷ்ணன் மற்றும் குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த ஆரிப் என்கிற இருவரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தப்பிச் சென்ற ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நடிகை கௌதமியின் நில மோசடி புகார்; அழகப்பனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!