மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மகன் நவீன் குமார்(23). மேலும், கும்பகோணம் செக்கடி தெரிவைச் சேர்ந்த குமார் மகள் நிவேதா(19), இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நவீன் குமார் மற்றும் நிவேதா இருவருக்கும் நேற்று முன்தினம் (ஜன.25) கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, விசேஷத்திற்கு வந்த உறவினர்கள் 25 பேருடன் மணமக்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு, வேனில் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மணமக்கள் நவீன் குமார் மற்றும் நிவேதாவுடன் அவர்களது உறவினரான கும்பகோணம் நாராயணபுரம் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன்(12), மூவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மூவரும் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது இவர்களின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள், அருகே இருந்த மீனவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற அவர்கள் கடலுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் தண்ணீரில் மூழ்கியதில், மணமகன் நவீன் குமார் மற்றும் சிறுவன் சரவணன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.