சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 67 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த நபர்கள், கள்ளச்சாராயம் சப்ளை செய்த நபர்கள், அதற்கு மெத்தனால் சப்ளை செய்த நபர்கள் என தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீசார் இதில் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்து வருகின்றனர். இதன்படி, இதுவரை சுமார் 22 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் மெத்தனால் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட மாதேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சென்னையை அடுத்த மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இருவரையும் தற்போது போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் கள்ளச்சாராய வியாபாரி சின்னக்கண்ணிடம் சாராயத்தை வாங்கி, அதனை பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் யார் யாருக்கு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தார்கள் என்பது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இவர்களுடன் சேர்த்து இதுவரை சுமார் 24 நபர்களை சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெத்தனாலை சப்ளை செய்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. ரூ.2 கோடி கேட்டு கடத்திய மாணவன் 3 மணி நேரத்தில் மீட்பு.. வெளியான பகீர் ஆடியோ! - school student kidnapped in madurai