சென்னையில் கெட்டுப்போன பீட்சா விவகாரம் தொடர்பான வீடியோ (Credits: ETV Bharat Tamil Nadu) சென்னை:சென்னை எண்ணூர் மகாலட்சுமி நகரில் ஜீவிதா - சாந்தகுமார் தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணியான ஜீவிதா பிரசவத்திற்காக திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பார்ப்பதற்காக ஜீவிதாவின் தாயார் கற்பகமும், அவரது 6 வயது மகள் ஜானவியும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்தில், சிக்கன் பீட்சா 2 மற்றும் வெஜ் பீசா 2 என ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். பின்னர், அவற்றை வாங்கி சாப்பிடத் தொடங்கிய இருவருமே, சில மணி நேரங்களில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இவ்விருவரும் சாப்பிட்ட உணவில் துர்நாற்றம் வீசியதாக தெரிய வருகிறது. உடனே மருத்துவமனையில் மருத்துவரிடம் கேட்ட போது, 'கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக' மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜீவிதாவின் தாயார் கற்பகமும், குழந்தை ஜானவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, மீதமுள்ள உணவை சம்பந்தப்பட்ட கடைக்கு கொண்டு சென்று கேட்டபோது, முறையான விளக்கம் அளிக்காத நிலையில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோன்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்த நிலையில், திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இதனால்தான் வளர்ப்பு நாய்கள் கூட மனிதர்களை கடிக்கிறதா, நாய் கடியிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன? - மருத்துவர் கூறும் விளக்கம்! - Reasons For Dog Bite