ராமேஸ்வரம்:உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்து விட்டு, அதன் பின் கடற்கரை ஓரமுள்ள தனியார் குளியல் மற்றும் உடைமாற்றும் அறைகளில் உடைமாற்றிவிட்டு கோயிலுக்குள் தரிசனத்திற்காக செல்வது வழக்கம்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய், மகள், மகன் உட்பட நான்கு பேர் ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்துவிட்டு தனது குடும்பத்துடன் உடை மாற்றுவதற்காக டீ கடைக்கு அருகேயுள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த அறையில் கேமரா இருப்பதை பார்த்த பெண் கேமராவை கைப்பற்றி தனது தந்தையிடம் கூறியதை அடுத்து அருகில் இருந்த காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அதன் பிறகு திருக்கோவில் காவல்துறையினர் கடையை சோதனை செய்யும் போது உடைமாற்றும் அறையில் மூன்று ரகசிய கேமராக்கள் இருந்ததை கண்ட போலீசார் அதனை கைப்பற்றினார்.