தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா வியாபாரிகளிடம் ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்! - COIMBATORE POLICE

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதோடு, அவர்களிடம் ஜிபே(GPay) மூலம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் காவல் நிலையம்
ராமநாதபுரம் காவல் நிலையம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 3:39 PM IST

கோயம்புத்தூர்:கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேசன் மற்றும் முத்துக்குமார் என்ற இருவரை பிடித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வரும் கும்பலை இவர்களை வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால், கஞ்சாவை கடத்தி வந்த கும்பல் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியது. முறையாக திட்டமிட்டும் அந்த கும்பல் தப்பியது எப்படி என தனிப்படை போலீசார் குழப்பத்தில் இருந்தனர்.

இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தியதோடு, பணியில் இருந்த காவலர்களில் செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு கும்பலுக்கு கணேசன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் அலார்ட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் பிடியில் இருந்த கஞ்சா வியாபாரிகளிடம் ஜிபே மூலம் ரூ.2000 வாங்கிக்கொண்டு பணியில் இருந்த காவலர்களே செல்போனை கொடுத்து உதவியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ரவிசேகர் மற்றும் மாயசுதாகர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "கோவை மாநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த போதைப்பொருட்கள் யார் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பதை உளவுப் பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அந்தந்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களே போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகர காவல் துறையிடம் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் போதைப்பொருள் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்றவர்களை பிடித்து விசாரித்தோம். மேலும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்த இரு காவலர்களும் தங்களுடைய செல்போனை கொடுத்து அவர்களுக்கு உதவியதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

ABOUT THE AUTHOR

...view details