தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது! - MEDICAL WASTE

கேரள மாநில மருத்துவக் கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பசுமை தீர்ப்பாயத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்
மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் இரவோடு இரவாகக் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு மக்களுக்கு கடும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கல்லூர் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் குளத்தில் கொட்டப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின.

இதையடுத்து நேற்று பழவூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பொது இடத்தில் வீரியமிக்க மருந்துவக் கழிவுகளை கொட்டுதல், பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஈடுபடுவது ( BNS 271,272) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே சமீபகாலமாக அண்டை மாவட்டமான தென்காசியில் இதுபோன்ற மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மாநகரின் மிக அருகில் மக்கள் அதிக அளவு வசிக்கும் பகுதியில் இதுபோன்று மருத்துவக் கழிவுகளை கேரளாவிலிருந்து கொட்டப்படும் சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் குப்பைகளுடன் கேரளாவுக்கு செல்வேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மாவட்ட காவல் துறை சார்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க:“மக்களைத் தேடி மருத்துவம்" 2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கிய முதல்வர்!

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடய அறிவியல் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கழிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் இன்று அதிரடியாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர் (51) மற்றும் மாயாண்டி (42) இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,"குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு கிடைக்கப்பெறும் அறிவுரைகளைப் பொறுத்து மருத்துவ கழிவுகள் அகற்றப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதுகுறித்த கருத்துரைகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அதன் பின்பு தான் இந்த மருத்துவக் கழிவுகள் அகற்றப்படும்" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details