தஞ்சாவூர்: பூதலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த 42 வயது பெண். இவர் திருமணமானவர். இந்நிலையில், இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (26) இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறி பீரவீன் இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னால் ராஜ்கபூர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
பூதலூரை தாண்டியதும் ஆள் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை பிரவீன், ராஜ்கபூர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பிரவீன், ராஜ்கபூர் இருவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பூதலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்ட ஒழுங்கை கடுமையாக சாடி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதில் ''விடியா திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை இருப்பதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இதே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் கடந்த மாதம் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு, அப்பெண் உடனடியாக அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற நிலையில், காவல்துறையும் மருத்துவத்துறையும் தன்னை அலைக் கழித்ததாக ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.
பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள விடியா திமுக முதல்வருக்கு கடும் கண்டனம். ஓரத்தநாடு வழக்கை துரிதமாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது பூதலூர் வன்கொடுமையை தடுத்திருக்க முடியும்.
"சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது" என்று குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ என்று நினைக்கும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. ஒரத்தநாடு, பூதலூர் வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், இனி ஒரு நிர்பயா தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அசோக் நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு சர்ச்சை.. ஆசிரியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!