சென்னை: சென்னையில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பொதுமக்களை மர்ம கும்பல் மோசடி செய்வதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல் கோயம்பேட்டு பேருந்து நிலையம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் பணத்துடன் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர்.
விசாரணையில், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைபற்றி சோதனை செய்தபோது, இரண்டு ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை நிற தாள்கள் வைத்து மோசடி செய்ய முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதனை 5 லட்சம் ரூபாய் கொண்டு வரும் ஒருவரிடம், ரூ.10 லட்சம் எனக் கூறி ஏமாற்ற காத்திருந்ததும் தெரியவந்தது.