சென்னை: சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவித்து போலியான பங்கு வர்த்தக செயலிகள், லிங்குகள், வலைதளங்கள் அனுப்பியும், பொய்யான டிமேட் கணக்குகளை துவக்கியும் பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி நபர்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
வாட்சப் குழு: இந்நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து, அதன்மூலம் ஒரு வாட்சப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.
அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை அவர் பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தேதிகளில் ரூ.10,27,06,364-ஐ செலுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரம்; 11 பேர் பணியிடை நீக்கம்!
அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடியாளர்கள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முனைந்தபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தொழிலதிபரின் மனைவி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.