மயிலாடுதுறை:2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக கூறிய விஜய், தற்போது கூட்டணியைக் குறித்து சிந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். எந்த ஒரு புதிய கட்சியும், கட்சி தொடங்கிய சமயத்தில் கூட்டணிக்கு அழைத்ததில்லை என நாகப்பட்டினம் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், விஜய் அரசியலை விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நேற்று - திங்கட்கிழமை (நவ.25) நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் மற்றும் பாலா அறவாழி, பரசு முருகையன் ஆகியோர் பங்கேற்று கட்சி நிர்வாகிகளிடம் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் பேசியபோது, “நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் 234 மாவட்ட செயலாளர்களை நியமிக்க விண்ணப்பங்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது. கருத்தியல் வலிமை பெற்ற கட்சியான விசிகவில் பலர் இணைந்து வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு :ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது 1999-ல் திருமாவளவன் முதன்முதலில் வைத்த முழக்கம். அக்கருத்தை தேமுதிக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியது. விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் கட்சி தொடங்கி தனித்து தேர்தலை சந்திந்து தங்கள் பலத்தை அறிந்துகொண்டு, அதன் பின்னரே அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைத்தனர்.
அரசியல் களத்தில் பயணிக்க வேண்டும்: இந்நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தற்போதுதான் கட்சி துவங்கி மாநாடு நடத்தியுள்ளார். மாநாட்டிற்கு பிறகு எந்த பிரச்சனைக்கும் களத்தில் வரவில்லை. அரசியல் களத்தில் அன்றாடம் பயணிக்க வேண்டும், எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. களத்திற்கு வராமல் நிகழ்ச்சி நடத்தினால் வெற்றி பெற முடியாது.