விக்கிரவாண்டி/விழுப்புரம்: தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதல் மாநில மாநாட்டில், கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. ‘வெற்றி வாகை’ எனத் தொடங்கும் பாடலில், விஜய்யின் குரல் சேர்க்கப்பட்டுள்ளது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்,’ ‘தமிழ்நாடு வெற்றிக் கழகம்,’ ‘தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்,’ போன்ற சொல்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இதில் விஜய்யின் குரல் முக்கியக் கொள்கைகளை உரக்கச் சொல்லியிருக்கிறது.
அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, ‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில, நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும்,
அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீர தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும், நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று சாதி, மத. பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் (Secular Social Justice Ideologies) உடன் தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கணும்னு நான் வரேன்!” என்று பாடலுக்கு இடையில் முடித்திருந்தார் விஜய்.