சென்னை:உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சினிமாவில் இருந்து அரசியல் சென்ற பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 10.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாகவும், அவரை எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியானது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய், சரத்குமார், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
விஜய் இரங்கல்:
நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது சமூக வலைத்தளத்தில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.