தென்காசி:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென் மண்டலத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (பிப்.17) குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை திமுகவுடன் நடைபெறவில்லை. அப்படி நடைபெறும்பட்சத்தில் ஒரு பாராளுமன்றத் தொகுதியை கேட்டு பெறுவோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் டி.வி.கே (TVK) என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், டி.வி.கே (TVK) என ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கருத்துக்களைக் கேட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும்.