திருநெல்வேலி:தமிழ்நாட்டில் சினிமாவில் துவங்கி அரசியலில் ஜொலித்தவர்கள் என்ற பெருமை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் கேப்டன் விஜயகாந்துக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவில் வழியில், சிவாஜி, டி.ராஜேந்திரன், கார்த்திக், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் கூட, அவர்கள் யாரும் மக்களிடம் பெரிய அளவில் செல்வாக்கு பெறவில்லை.
பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் மட்டும் எப்படி ஆட்சியை பிடிக்க முடிந்தது என்றால், அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கை பெற்றிருந்தனர் என்றே கூறலாம். அவர்களுக்கு அடுத்த படியாக, கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைத் துவங்கியவர் நடிகர் விஜயகாந்த். மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்த காரணத்தால், கட்சி துவங்கிய முதல் தேர்தலிலேயே சுமார் 7% வாக்குகளைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2011 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டப்பேரவையில் அமர்ந்தார்.
மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்கள்: இந்நிலையில், நடிகர் விஜயகாந்துக்குப் பிறகு, சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வரும் நடிகர் விஜயும் அரசியலில் மக்கள் செல்வாக்கை பெறுவார் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கேற்ப அரசியல் கட்சி துவங்கும் ஆசை விஜய்க்கும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூகப்பணிகளை செய்து வந்த விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை அதிரடியாகக் துவங்கினார்.
ஒருபக்கம் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் இருந்தாலும், மறுபக்கம் தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய அரசியல் சூழலில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் அதிகம் உள்ளனர். எனவே, இந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டால் நிச்சயம் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவார் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.
கொடி அறிமுக விழா:அந்த வகையில், விஜய்யும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தவெகவின் கொடி அறிமுக விழா, இன்று சென்னை பனையூரில் கோலாகலமாக நடந்து வருகிறது. என்னதான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைக்க இருந்தாலும் கூட, 2 நாட்களுக்கு முன்னதாகவே (ஆக.19) அவசர அவசரமாக, கட்சிக் கொடியை தனி ஆளாக ஏற்றி வைத்தார் விஜய். அதுகுறித்து இணையத்தில் வைரலான நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக விஜய் கொடியை ஏற்றியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால், முன்கூட்டியே கொடியேற்றியதின் பின்னணியில் ஜோதிட ரீதியாக சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கட்சியின் முக்கிய நிகழ்வுகளை நல்ல நாள், நேரம் பார்த்தே செய்கின்றனர். அதிலும், பகுத்தறிவு கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சித் தலைவர்கள் கூட திரைமறைவில் சாதகத்தை சார்ந்திருப்பதாக ஒரு பேச்சு உலவி வருகிறது.
அந்த வகையில், தவெகவின் கொடி அறிமுக நிகழ்ச்சி மிக முக்கியமான கட்டமாக கருதப்படுவதால், இந்த நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர். விஜய்க்கும் அந்த ஆசை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் திட்டமிட்டுள்ள ஆக.22ஆம் தேதி, விஜய்யின் சாதகத்தில் கெட்ட நாள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இன்று தேய்பிறை என்பதாலும், வானுமத்திம தோஷம் இருப்பதாலும் இன்று கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றால் விஜய்க்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.