சென்னை :மாநிலங்களவையில் நேற்று (டிச 17) அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும்.
இருந்தபோதும் அம்பேத்கர் பெயரை காங்கிரசார் சொல்வது பாஜகவிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டுமென்றார். இவரின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிதம்பரம் எம்.பி தொல்.திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க :"அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்" - அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் விமர்சனம்!
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
சீமான் கண்டனம் : ‘அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ’அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்’ என்றார்.
பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். ’எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க? என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.