விழுப்புரம்: நடிகர் விஜயின்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள் வி.சாலையில் செப். 23ம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் கடந்த மாதம் 28ம் தேதி விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி ஆகியோரிடம் தனித்தனியே மனுக்களை அளித்தாா்.
மாநாடு ஏற்பாடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற 21 கேள்விகளுக்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி எஸ்.சுரேஷ் செப். 2ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தாா். இதுதொடா்பாக, சட்ட நிபுணா்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் ஆலோசனை நடத்தினாா்.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி எஸ்.சுரேஷிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெள்ளிக்கிழமை மாலை கட்சி சாா்பில் தயாா் செய்யப்பட்டிருந்த பதில் கடிதத்தை வழங்கினாா்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு காவல் துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை தவெகவிடம் விழுப்புரம் மாவட்ட காவல் துறை வழங்கியுள்ளது. இதையடுத்து தவெகவினர் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தினை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்தார் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த். இந்நிலையில், இன்று இந்திய தேர்தல் ஆணையம் தவெகவுக்கு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு வெற்றிக் கழகம் நடத்தும் மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள தவெக கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்யப்பட்டது குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.