சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கல்பட்டாவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நிலச்சரிவில் 76 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.