சென்னை:தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் கடந்த அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் ‘வெற்றி கொள்கைத் திருவிழா’ என்னும் பெயரில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய் பேசியவை இன்று வரையில் தமிழக அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
குறிப்பாக விஜய் தனது கட்சி கொள்கையை எடுத்துரைத்தபோது, '' பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி.. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்பதே நமது கருத்து.. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. எக்ஸ்ட்ரா லக்கேஜாக நான் இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை'' எனக்கூறினார். அத்துடன், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்றும் விஜய் முழங்கினார்.
சீமான் விமர்சனம்:விஜயின் கட்சி கொள்கைகள் மற்றும் அவரது பேச்சு, அரசியல் கட்சிகளிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர் சீமான் விஜயின் மாநாட்டுக்கு முன்பு அளித்து வந்த ஆதரவு போக்கை நிறுத்திவிட்டு, கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
இதையும் படிங்க:கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், '' திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் (திமுக) தெரியவில்லை. தமிழ் தேசியம் என்ன என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. ஒண்ணு ஆத்துல கால வை, இல்லன்னா சேத்துல கால வை. இரண்டிலும் கால் வைத்தால் என்ன அர்த்தம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று, எங்கள் கண்ணு என்று கூறியதைக் கேட்டு பயந்துவிட்டேன். அடிப்படையே தவறு.. இது கொள்கை இல்லை கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. சாலையில் எந்த ஓரத்திலும் நிற்காமல் நடுவில் நின்றால் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ'' என்று கடுமையாக சாடி பேசியிருந்தார் சீமான்.