தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையால் அகற்றப்படும் தவெக பேனர்கள்.. விழுப்புரத்தில் நடப்பது என்ன?

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக மாநாட்டு பேனர்களை போலீசார் அகற்றி வருகின்றனர்.

தவெக பேனர்
தவெக பேனர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

விழுப்புரம்:விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும், பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு திடலில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது செங்கல்பட்டு தொடங்கி, விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்களை அகற்றுமாறு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல பேனர்கள் அகற்றப்படுவதுடன் அதனை போலீசார் கிழிப்பதாகவும், தேசப்படுத்துவதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும், நாங்கள் இந்த பேனரை ஐந்து நாட்களுக்கு முன்னரே வைத்துவிட்டோம். அப்பொழுது இது பற்றி கூறியிருந்தால் நாங்கள் அதற்குரிய இடத்தில் வைத்திருப்போம். அப்போது கூறாமல், மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று பேனர்களை அகற்றக்கூறி, மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாக தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:குதிரை வண்டி முதல் ஏசி பஸ் வரை.. படையெடுக்கும் தொண்டர்கள்.. தவெக மாநாட்டுப் பணிகள் தீவிரம்!

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “நெடுஞ்சாலையை ஒட்டி பத்து மீட்டர் தாண்டி பேனர் வைக்க வேண்டும்.மேலும் மாநாடு நடத்துவது தொடர்பாக காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளின் படி ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்கிற நிபந்தனையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையும் மீறி அவர்கள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைத்துள்ளனர். உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பெயரிலேயே நாங்கள் பேனர்களை அகற்றுகிறோம்” என்று கூறினர்.

நேற்றைய தினம் மாநாடு நடைபெறும் பகுதி அருகே ‘தல ரசிகன், தளபதிக்கு தொண்டன், நம் அண்ணா அழைக்கிறார், அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்’ என்ற வரிகள் அடங்கிய அஜித் ரசிகர்களால் வைக்கப்பட்ட பேனர் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details