சென்னை:சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலை மற்றும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், மரியாதை செலுத்த வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் கூறுகையில், "தமிழகத்தில் இருக்கும் மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்களை எல்லாம் எடுத்துக்கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது.
அதே போன்று இந்த ஆண்டும் 116 சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கு மரியாதை செய்வது, கருத்தை மக்களுக்கு கொண்டு செல்வது, புத்தகம் வெளியிடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, மாணவர்களுக்கு பிரசுரங்கள் என கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வழங்க உள்ளோம்" எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சிறு வணிகம், நடுத்தர வணிகம், பெரிய வணிகம் என்ற அளவிலே பன்மடங்கு தொழில் வரி உயர்ந்திருக்கிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. இதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கொள்ளிடத்தில் இருந்து வெளியேற்றக் கூடிய நீரை சில ஆறுகளில் திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று விவசாயிகள் கேள்வி கேட்கிறார்கள். உடனடியாக அனைத்து ஆறுகளுக்கும் தண்ணீர் செல்லக்கூடிய நிலையை பொதுப்பணித்துறை ஏற்படுத்த வேண்டும்.
திருச்சி கொள்ளிடம் பாலத்திற்கு கீழ் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது. அதேபோல, அங்கு கட்டப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்து இருக்கிறது, உடனடியாக பொதுமக்களுக்கான பாதுகாப்பை அப்பகுதியில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.