கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பம் மற்றும் சிகிச்சையில் இருக்கும் நபர்களை அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு வந்த தகவலின் படி 20 பேரின் உடல்நிலை சீராக இல்லை. சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராய இறப்பிற்கு முழு காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக தோல்வி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என தெளிவாக தெரிகிறது.
காவல் நிலையம் மிக அருகே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக முதலமைச்சருக்கு தெரிந்ததா? இல்லை தெரிந்தும் அமைதி காத்தாரா? . ஏற்கனவே பொதுவெளியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளும் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை பயமாக இருப்பதாகக் கூறி இருக்கிறார்.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பேற்று காரணங்கள் சொல்லாமல் இனிமேலாவது தமிழகத்தில் இது போன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரையிலாவது பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம், அடாவடித்தனங்கள் தான் கள்ளச்சாராய உயிரிழப்புக்குக் காரணம். காவல்துறையை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். கட்சி நிர்வாகியை கட்டுபடுத்தி காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் சரியாகச் செயல்பட விட வேண்டும்.