தேனி: தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமமுக வேட்பாளர்களாக தேனியில் நானும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறோம். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்றார்.
பின்னர், தங்க தமிழ்ச்செல்வனும், நீங்களும் போட்டியிடுகின்றீர்கள், குரு சிஷ்யன் போட்டி என எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை. அம்மாவுக்கு தான் நான் சிஷ்யன். மக்கள் செல்வன் என்ற பட்டமே, தேனி தொகுதி மக்கள் தான் வழங்கினார்கள். டிடிவி என்றால், தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற விளக்கமும் தேனியில் தான் கொடுத்தனர்.