திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறைக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. தமிழக அரசாங்கத்திற்குள் உள்ள இரண்டு துறைகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படுவது பொதுமக்களுக்கு நல்லது அல்ல.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவைப் பற்றி தவறாக பேசவில்லை. இதற்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டியது தேவையில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள இந்துத்துவா வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல திராவிட கட்சி தலைவர்கள் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வேஷம் போடுவார்கள்.
இந்துவாக பிறந்த எல்லாரும் திருடர்கள் என்று கருணாநிதி கூறியதற்கு, அந்த காலத்தில் பலரும் வரவேற்ற காலம் உண்டு. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், முதலமைச்சராக இல்லாத காலத்திலும் இந்து வழிபாட்டில் உள்ள நெறிமுறைகளையும், வழிபாடுகளையும் பின்பற்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தான் பிற மதத்தை சமமாக பாவிக்க முடியும்.
சில நபர்கள் போல் ஜெயலலிதா அரசியலுக்காக பேசுபவர் அல்ல. பாஜகவுடன் நான் கூட்டணியில் இருப்பதாலோ, அண்ணாமலை எனது நண்பர் என்பதாலோ தான் பேசவில்லை. அவர் பேசியதை படித்துவிட்டு தான் இதை கூறுகிறேன். அதேபோல், தேனியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அண்ணாமலை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, டிடிவி தினகரன் தலைமையில் ஒன்றிணையும் என்று அவரது கருத்தை கூறியுள்ளார்.