தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரை கோழியம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஜெய் ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
லாரி ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவருடைய லாரியில் கண்ணாடி பாரம் ஏற்றிக்கொண்டு மேகலாயாவில் உள்ள சில்லாங் பகுதிக்குச் சென்றுள்ளார். இதில் மணிகண்டன் ஓட்டுநராகவும், அவரது உறவினர் பெருமாள் என்பவர் உதவியாளராகவும் சென்றுள்ளனர்.
கடந்த ஜன.24ஆம் தேதி காலை சில்லாங் அருகே சென்றபோது தாழ்வான பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் உருண்டு அருகில் உள்ள குடியிருப்புக்குள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உதவியாளராக இருந்த பெருமாள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிர் தப்பிய பெருமாள், விபத்தில் மணிகண்டன் உயிரிழந்த தகவலை அவரது வீட்டிற்கு தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினி, மேகாலயாவிலிருந்து மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பணம் செலவாகும் என்பதால், உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், லாரி உரிமையாளரும் தான் லாரியை இழந்து கடன் சுமையில் இருப்பதால் தன்னால் ஓட்டுநர் மணிகண்டனின் உடலைக் கொண்டு வருவதற்கான வசதி இல்லை எனவும், தனக்கு லாரி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறும் வீடியோ ஒன்றை லாரி உரிமையாளர் வெளியிட்டிருந்தார்.