திருச்சி:திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் நேற்று (ஆக.29) இன்டர்நெட் சரி செய்வதற்காக சென்ற கல்லூரியின் ஒப்பந்த பணியாளரான முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன்(38), விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்பட்டது.
அப்போது அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு சக மாணவிகளிடமும், தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டனிடம் முறையிட்டபோது, வார்டன் மாணவிகளை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதனால், மாணவியிடம் அத்துமீறிய ஒப்பந்த ஊழியரைக் கைது செய்யக் கோரியும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசிய விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கதிரேசன் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் 332, 75/1, 4/U TNPHW உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
ஆனாலும், என்ஐடி கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையை கண்டித்தும் சக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த ஏடிஎஸ்பி கோபால் சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதையேற்காத மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என முழக்கமிட்டனர்.
அப்போது, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சாத மாணவர்கள் தொடர்ந்து போராடினர்.
அப்போது திருச்சி எஸ்பி வருண்குமார் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினார். விடுதிக்காப்பாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்பொழுதுதான் போராட்டத்தைக் கைவிடுவோம் என மாணவர்கள் குறிப்பிட்டனர். பின்னர், எஸ்.பி உடனடியாக விடுதி காப்பாளர் மற்றும் என்ஐடி இயக்குநர்களிடம் கலந்து ஆலோசித்து வார்டன் தேவியை மன்னிப்பு கேட்க வைத்தார். அதன் பின்னர், என்ஐடி நிர்வாகம் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது எனது உறுதியளித்ததையடுத்து சுமார் 18 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.