திருச்சி:இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தை நாம் அனைவரும் புத்தாடை, பட்டாசு, பலகாரம் என குடும்பத்துடன் கொண்டாடி வரும் நிலையில் 11ஆம் வகுப்பு பயிலும் சுகித்தா என்ற மாணவி நாம் அனைவரும் வியக்க வைக்கும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை செய்துள்ளார்.
யார் இந்த சுகித்தா:தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் கின்னஸ் உலக சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தா.
இல்லாதகர்களுக்கு வழங்கி மனநிறையுடன் தீபாவளி:இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாட இயலாத மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர நடைபாதைகளில் வசித்து வரும் முதியோர்களுக்கு அவர் சேமித்து வைத்த பணத்தில் சேலை, கைலி, துண்டு மற்றும் இனிப்பு வகைகளுடன் 100 ரூபாய் பணமும், தனது வீட்டில் சமைக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையும் வழங்கி தீபாவளியினை மனநிறைவுடன் கொண்டாடினார்.