மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் பாஜக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது,"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது, எப்போதும் போல வந்து போகின்ற தேர்தல் இல்லை. இந்த தேர்தலின் முடிவுதான் அடுத்து யார் ஆட்சியில் அமரப் போகிறார் என்பதை தீர்மானிக்கப் போவது அல்ல. இந்த நாடு ஜனநாயக நாடாகத் தொடர்ந்து இருக்கப் போகிறதா, இல்லையா என்பதை பற்றிய தேர்தல்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ஆட்சி தழைக்குமா அல்லது ஒற்றை அதிபர் ஆட்சி முறை வருமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது மிகவும் அபாயகரமானது. இந்த சட்டத்தின்படி சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியேறலாம். அவர்களுக்கு இந்திய நாடு குடியுரிமை தரும் எனத் தெரிவித்தார்கள்.
ஆனால், இதில் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை. மற்றவர்களுக்குக் குடியுரிமை உண்டு எனச் சொன்னார்கள். சட்ட மசோதா குறித்த விவாதத்தின்போது இஸ்லாமியர்களைச் சேர்க்க வேண்டும், இலங்கையச் சேர்ந்த தமிழர்களைச் சேர்க்க வேண்டும், அதேபோல் இனம் சார்ந்துள்ள அனைவரையும் சேர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.