திருச்சி:திருச்சியில் 2024ஆம் ஆண்டிற்கான மிஸ்டர், மிஸ்ஸஸ், மிஸ், ஜூனியர் திருச்சி அழகி போட்டி திருச்சி மொராய் சிட்டி பகுதியில் நேற்று (ஜூன்.22) நடைபெற்றது. இதில் திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத இளம் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 4 பிரிவுகளின் கீழ் அழகி போட்டி நடத்தப்பட்டடது. இந்த போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 பேர் கலந்து கொண்டனர்.
முதலில் குழந்தைகளுக்கான அழகி போட்டியும் பிறகு இளம் பெண்களுக்கான அழகி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் பல வண்ணங்களில் உடை அணிந்து ராம்ப் வாக் செய்து காட்டி அசத்தினர். பிறகு திருமணம் ஆகாத பெண்களுக்கான பிரிவில் மயில் போல நடை போட்டு அழகிகள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர். அதில் கருப்பு உடையில் ராம்ப் வாக்செய்த காரைக்கால் பகுதியை சேர்ந்த மன்சூரா டோலினா என்ற பெண் முதல் இடத்தைப் பிடித்தார். அவருக்கு தலையில் கிரீடம் வைத்து கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் பெண்கள் அழகான ஒய்யார நடைப்போட்டு ராம்ப் வாக் செய்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விசித்ரா செய்தியாளரிடம் கூறுகையில், "இப்போது வெற்றி பெற்ற மிஸ், மிஸ்ஸஸ் மிஸ்டர், கிட்ஸ் திருச்சி என்ற பட்டத்தை வென்ற அழகிகளை அடுத்த கட்டமாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் வேர்ல்ட் என அவர்களை கொண்டு போகிறோம்" என்றார்.