வடகிழக்கு பருவமழை: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு! - TRICHY HELPLINE NUMBERS
திருச்சியில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மக்கள் மழை தொடர்பாக 1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் பிரதீப் குமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 மணி நேர கட்டுபாட்டு அறை:அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகார் எண்:அறிக்கையில், “1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம். தொடர்ந்து, 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வட்டாட்சியர்களின் அலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது, பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கு வண்ணம் டி.என்.அலர்ட் (TN - ALERT - Mobile App) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த TN - ALERT செயலியை 'Google Play Store’ மற்றும் 'IOS App Store'-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)