திருச்சியில் ஆதரவற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு செருப்பு வாங்கி கொடுத்த 10ஆம் மாணவி திருச்சி: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருச்சியில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில், திருச்சி சுப்ரமணியபுரத்தில் வசிக்கும் மோகன் - பிரபா தம்பதியரின் மகள் சுகித்தா. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இவர், இன்று (ஏப்.9) தனது சகோதரர் சுஜித் உடன் சேர்ந்து, ஸ்ரீரங்கம், மாம்பழ சாலை, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கோவில் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற 100க்கும் மேற்பட்டோர்க்கு செருப்பு வாங்கி கொடுத்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "நான் கடந்த 5 வருடங்களாக சாலையோர ஆதரவற்றவர்களுக்கு குளிர்காலத்தில் போர்வை, மழைக் காலங்களில் குடை, வெயில் காலங்களில் செருப்பு மற்றும் விசிறி எனவும், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வருடம்தோறும் புத்தாடை, துண்டு, இனிப்பு, காரம் மற்றும் ரூ.100 கொடுத்து எனது மகிழ்ச்சியை ஆதரவற்றோருடன் பகிர்ந்து வருகிறேன்.
என்னைப்போல பலரும் உங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்து, அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் மனநிம்மதி அடைய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். முன்னதாக, இவர் செய்யும் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருதும், ரூ.1 லட்சம் காசோலையும் கொடுத்துச் சிறப்பித்துள்ளனர். இந்த விருது தொகையை அவர் ஆதரவற்றோர்களுக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீலகிரியில் உடல் நலக்குறைவால் ஆண் யானை உயிரிழப்பு! - ELEPHANT DIED IN NILGIRIS