தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளராகத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவருக்கு ஆதரவாக ஏற்காட்டைச் சேர்ந்த மலைவாழ் பெண் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பச்சை கலரில் புடவை அணிந்து கப்பல் சின்ன பதாகைகளை ஏந்தி இன்று (ஏப்.11) பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்தல் பிரகடனத்தினை பி. ஆர். பாண்டியன் வெளியிட்டார். அதில் தேங்காய், எள், நிலக் கடலை எண்ணெய் விற்பனையை வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு அணை நீர் கொள்ளளவை 152 அடியாக உயர்த்தவும், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்த நிறுத்த வலியுறுத்தியும் தேர்தல் பிரகடனம் வெளியிடப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலியாக இருந்து காப்பீட்டுத் திட்டத்தை, விவசாயிகளுக்குப் பெற முடியாத நிலையை உருவாக்கி விட்டது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமான கொள்கைகளைக் கையாண்டு கொண்டு, கொள்கை முடிவு எடுத்து தமிழ்நாட்டு மக்களை அழிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு செயல்படுகிறது.