தமிழ்நாடு

tamil nadu

காரைக்குடி டூ சென்னைக்கு ஏசி ஸ்லீப்பர் பஸ் கேட்ட உறுப்பினர்.. அமைச்சரின் பதிலால் அவையில் சிரிப்பலை! - TN Assembly Session 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 3:18 PM IST

TN Assembly Session: காரைக்குடியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதனை வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துகள் வேண்டும் என காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி கேட்ட கேள்விக்கு, ஏற்கனவே இயக்கப்படும் பேருந்தில் 72.7 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர் எனவும், எம்எல்ஏ மாங்குடி சென்னை, புதுவை, கோவை என அனைத்து ஊர்களுக்கும் பேருந்து கேட்டுவிட்டார் எனவும் சிரித்துக் கொண்டே அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடப்பாண்டிற்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூன் 27) காலை 9.30 மணிக்கு துவங்கிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, வினாக்கள் - விடை நேரத்தில் கேள்வி எழுப்பிய காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி, "காரைக்குடியில் இருந்து சென்னைக்கு குளிர்சாதனை வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்க வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.

மேலும், காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை வழியாக சென்னைக்கும், காரைக்குடியிலிருந்து தேவக்கோட்டை வழியாக சென்னைக்கும் இரவு நேரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்து இயக்கவும் அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "வழித்தடம் 136 எண் கொண்ட பேருந்து ஏற்கனவே தேவக்கோட்டையிலிருந்து காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் குளிர்சாதன படுக்கையுடன் கூடிய வசதியோடு தான் இயக்கப்படுகிறது. இதில் 72.7 சதவீதம் பயணிகள் மட்டுமே தற்போது பயணித்து வருகிறார்கள். ஆனால், அவை உறுப்பினர் மாங்குடி சென்னை, கோவை, புதுவை என அனைத்து இடங்களுக்குமே பேருந்து கேட்டுவிட்டார். ஏற்கனவே காரைக்குடி பகுதிக்கு 6 வழித்தடத்திற்கு நீட்டிப்பு, புதிய பேருந்து வழத்தடங்களும் வழங்கப்பட்டுள்ளது என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

அதேபோல, ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி வழியாக சென்னைக்கு காலை 8 மணிக்கும், இரவு நேரத்தில் 7 மணிக்கும் படுக்கை வசதியோடு கூடிய குளிர்சாதனப் பேருந்து ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர் கேட்டது போல, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும், பழைய பேருந்துகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவைகளை சரிசெய்யும் பணிகள் சென்று கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புனித யாத்திரை புத்துயிர் திட்டத்தில் தமிழ்நாட்டில் 8 கோயில்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details