தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கக் கூடாது.. போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை..! - கிளாம்பாக்கம்

Transport Commissioner: பணிமனைகள் அமைந்துள்ள அனைத்து இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை எனப் போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Omni bus
Omni bus

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 6:14 PM IST

சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தவறாக, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புரிந்து கொண்டார்கள் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்.09 ஆம் தேதி ஒரு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. அதில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் எனத் தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே, இதனைத் தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிடப் பட வேண்டும் எனவும் பிற இடங்களைக் குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதனை மீறுவதால் பயணிகளுக்குத் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததைக் கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது.

மேலும், உயர் நீதிமன்றம் பிப்.01 அன்று பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவில் கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னரே, ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த அறிய இயலும் என்பதாலும்,அப்போது தான் அதற்கு ஏற்றவாறு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதையும் உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண்; குவியும் பாராட்டுகள்; முதல்வர் வாழ்த்து..!

ABOUT THE AUTHOR

...view details