சென்னை:உலக சுகாதார நிறுவனம், குரங்கு அம்மை காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) அறிவித்ததைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சுகாதார வசதிகளின் தயார் நிலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், குரங்கு அம்மை காய்ச்சல் நோயின் கண்காணிப்பின் நிலை, தனிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு விவாதித்தார்.
மேலும், மத்திய அரசு குரங்கு அம்மை காய்ச்சலை பரிசோதிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மையமாக சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டை தேர்வு செய்துள்ளது. ஆனால், குரங்கு காய்ச்சலால் பாதிப்புகள் இதுவரை மாநிலத்தில் பதிவாகவில்லை. இருப்பினும், கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.